Friday, December 23, 2022

வள்ளுவர் வழி


இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

 நாம் எல்லோருமே பள்ளியில் படித்த குறள்தான். திரைப் பாடலிலும் வந்துள்ளது. இதன் உட்பொருள் காண்போம் பரிமேலழகர் உதவியுடன்.  

ஒருவன் செயலின் கண் ஈடுபடும்போது, ஊழாலோ, பொருளின்மையாலோ, உடல் வருத்தத்தாலோ, இடையூறு வரலாம். அதை எப்படி எதிர்கொள்வது? 

அந்த செயல் முடிவில், நிறைவுற்றால் மகிழ்ச்சி உண்டாகும் அன்றோ? அந்த மகிழ்ச்சியை அகக்கண்ணில் கொண்டு வந்து உள்மகிழ்க என்கிறார். இடையூறு வந்தபோது, அதற்குச் சோர்வுறாது, அவ்வாறு உள்மகிழ்தலால், அந்த சோர்வு குன்றி, அச்செயல் முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.  அவ்வற்றலால் அச்செயலை இடையூறைப் புறந்தள்ளி விட்டுச் செய்யவியலும் என்கிறார். 

உளவியலாளர், visualisation concept என இதைக் குறிப்பிடுவர்.  விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குக் கூறும் உளவியலான உத்தி இது. இத்தகைய நுட்பமான உளவியல் கருத்தைத்தான் திருவள்ளுவர் பொருட்பாலில், அரசியல் அதிகாரத்தில் கூறியுள்ளார். இது அன்றாட வாழ்விலும் நமக்கு பெரிதும் வழிகாட்டும்.